அரியமான் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட போலீசார்
அரியமான் கடற்கரையில் போலீசார் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை பகுதியில் நேற்று சர்வதேச கடல் தினத்தை முன்னிட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், கடலோர போலீசார் மற்றும் மீன்வள பல்கலைக்கழக பணியாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் எதுவும் வீசக்கூடாது என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.