தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிக்கை

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-;

Update: 2023-09-15 07:06 GMT

நெல்லை மாநகரம், மாவட்டத்தில் கொலை குற்றங்கள் அதிகமாகிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. தென் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு வரையில் 364 கொலை சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இந்த ஆண்டில் ஆகஸ்டு வரையில் 323 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. எனவே நெல்லை மாநகரம், மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் அதிகமாகி உள்ளன என்ற தகவல் தவறானது ஆகும்.

மேலும் தென்மண்டலத்தில் இரு வேறு சமூகத்தினர் இடையே நடைபெற்ற கொலை வழக்குகளை பொறுத்தவரை சென்ற ஆண்டு ஆகஸ்டு வரையில் 82 வழக்குகளும், இந்த ஆண்டில் 74 வழக்குகளும் பதிவாகி உள்ளன. எனவே சாதி ரீதியான கொலை வழக்குகளும் குறைந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் தாக்கலான கொலைவழக்குகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் 1,090 வழக்குகளும், இந்த ஆண்டில் 1,052 வழக்குகளும் தாக்கலாகி உள்ளன. எனவே மாநிலம் முழுவதும் ஒப்பிட்டாலும் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொலை வழக்குகள் குறைந்துள்ளன.

இவற்றை மேலும் கட்டுப்படுத்திட ஒவ்வொரு வாரமும் தீவிர நடவடிக்கை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சாதி ரீதியிலோ, முன்விரோதம் காரணமாகவோ ரவுடிகளுக்கு இடையிலான மோதல் காரணமாகவோ கொலை சம்பவங்கள் நிகழாத வண்ணம் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

நீதிமன்ற விசாரணை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முக்கிய வழக்குகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்