சுதந்திர தினத்தையொட்டி போலீசார் தீவிர சோதனை

கரூர் மாவட்டத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

Update: 2023-08-14 18:33 GMT

சுதந்திர தினவிழா

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் கரூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் இன்று காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொள்கிறார்.

கலை நிகழ்ச்சிகள்

இதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சுதந்திர தினவிழாவையொட்டி நேற்று கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் மைதானம் தற்போது போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கு தனித்தனியாக இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடனும் போலீசார் மைதானத்தில் அனைத்து இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

500 போலீசார் பாதுகாப்பு

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், ரெயில்வே வழித்தடங்கள், பஸ் நிலையங்கள், சுதந்திர தினவிழா நடைபெறும் இடமான கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் இந்த இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு ரோந்தை அதிகப்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூர் ரெயில்நிலையம் வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கின்றனர். பயணிகளும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் நடைமேடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்