சுதந்திர தின விழா: நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரெயில்வே போலீசார் நாகை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரெயில்வே போலீசார் நாகை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், குணசேகரன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சோதனையை மேற்கொண்டனர்.
மெட்டல் டிடெக்டர்
அப்போது போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ரெயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் வழங்குமிடம், 2 மற்றும் 4 சக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
பார்சல்கள் பலத்த சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன. மேலும் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே தொடர்ந்து கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
சுழற்சி முறையில் பாதுகாப்பு
இதுகுறித்து நாகை ரெயில்வே போலீசார் கூறுகையில், 'சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக தீவிர சோதனை நடத்தி வருகிறோம்.
சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் நபர்கள் சுற்றி திரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வேளாங்கண்ணி திருவிழா இந்த மாத கடைசியில் தொடங்க இருப்பதால் நாகை ரெயில் நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். எனவே போலீசாரின் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றனர்.