பன்றி வளர்ப்பவர்கள் மீது போலீசில் புகார்
பெரியகுளம் அருகே பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி சார்பாக பலமுறை பன்றி வளர்ப்பவர்களிடம் அறிவுறுத்தியும், எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பன்றிகளை உரிமையாளர்கள் பிடிப்பது போன்று பிடித்து ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பகுதியில் விட்டு விடுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கீழவடகரை ஊராட்சி நிர்வாகத்தினர் சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் ஊராட்சி பகுதியில் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் பன்றி வளர்ப்பவர்களின் 10 பெயர்கள் அடங்கிய பட்டியலையும் வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.