35 இடங்களில் போலீசார் வாகன சோதனை;கூடுதலாக 10 சோதனை சாவடிகள் அமைப்பு
35 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனா். கூடுதலாக 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சியினர் கார்களில் ஈரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். தினமும் வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு நூற்றுக்கணக்கான கார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே சோதனையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய சோதனை சாவடியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடி அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் எல்லையில் இந்த சோதனை சாவடி அமைந்து உள்ளதால், சென்னை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாக வருகின்றன. எனவே அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு காளைமாட்டுசிலை, பெருந்துறைரோடு உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர், மூலப்பட்டறை, பவானிரோடு, சத்திரோடு, பெருந்துறைரோடு உள்பட முக்கியமான 35 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வெளியூரில் இருந்த வந்த கார்களில் கட்சி கொடிகள் இருந்தன. இந்த கொடிகளை அகற்ற போலீசார் அறிவுறுத்தினார்கள். இதேபோல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் சோதனை நடத்தப்பட்டது. கார்களில் வருபவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். இடைத்தேர்தலையொட்டி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற்காக 60 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வாகனங்களை சோதனையிட்டு வருகிறார்கள்.