பூங்காவுக்கு தோண்டிய குழியில் விழுந்து சிறுமி பலி; அரசு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்கு

சின்னமனூர் அருகே பூங்காவுக்கு தோண்டிய குழியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-09-19 17:21 GMT

சின்னமனூர் அருகே பூங்காவுக்கு தோண்டிய குழியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுமி சாவு

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பூங்காவுக்கு குழி தோண்டிய நிலையில் பணிகள் முடங்கிக்கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த குழியில் தேங்கிய மழைநீரில், கடந்த 6-ந்தேதி கடமலைக்குண்டு அருகே மூலக்கடையை சேர்ந்த முத்து சரவணன் மகள் ஹாசினி ராணி (வயது 8) தவறி விழுந்து பலியானாள். சிறுமி தவறி விழுந்து உயிரிழந்ததாக ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பூங்கா அமைக்கும் பணியில் ஏற்பட்ட அலட்சியத்தால் சிறுமி உயிரிழந்ததாகவும், இதற்கு நீதி விசாரணை நடத்தி அலட்சியத்துக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டு மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

3 பேர் மீது வழக்கு

அதன்படி, இன்று மாவட்டம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்துவிட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் நேற்று இரவு வரை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் பெற்றோருக்கு கலெக்டரின் பொது நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தப் பணியை எடுத்து இருந்த கம்பத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாலமுருகன், பணித்தள பொறியாளர் வேம்புபிரபு, மேற்பார்வை பொறியாளர் ராகுல்நேரு ஆகிய 3 பேர் மீதும் ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து முடிதிருத்தும் தொழிலாளர்களின் கடையடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். பின்னர் நிர்வாகிகள் முன்னிலையில், சிறுமியின் பெற்றோரிடம் ரூ.1 லட்சத்துக்கான நிவாரண உதவிக்கான காசோலையை கலெக்டர் முரளிதரன் வழங்கினார். மேலும், நிவாரண உதவிக்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்