விதிகளை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு
பசும்பொன் தேவர் குருபூஜை விழாவையொட்டி விதிகளை மீறியவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
பசும்பொன்னில் கடந்த 28-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. விழாவின்போது போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி பலர் நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளில் தெரியவந்துள்ளது. இதுதவிர காவல்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் குறித்து அடையாளம் கண்டு வழக்குபதிவு செய்து வருகின்றனர். இதன்படி கமுதி அருகே கிளாமரம் கிராம பகுதியில் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி வழியாக செல்ல முயன்றதை தடுக்க முயன்றவரை தாக்கியதாக 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கமுதி பெரியபள்ளிவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வழியில் செல்ல முயன்றவர்களை தடுத்த காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்தப்பட்ட முதல்கட்ட கண்காணிப்பு காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 15 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.