கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் பா.ஜ.க.வினர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்

கோவையில் வருகிற 31-ந் தேதி பா.ஜ.க.வினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினால், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-28 23:24 GMT

சென்னை,

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பதிவான வழக்கை தேசிய குற்றப்புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியது. இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) பந்த் நடத்த பா.ஜ.க., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

தடை வேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பிரகாஷ் ஆஜராகி, "இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு போலீசாரிடம் பா.ஜ.க., முறையான அனுமதி பெறவில்லை. அனுமதியின்றி நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். தொழில்துறையும் நஷ்டமடையும். எனவே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் வக்கீல்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ரபுமனோகர் உள்ளிட்டோர் ஆஜராகி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

அறிவிக்கவில்லை

வக்கீல் பால்கனகராஜ் வாதிடும்போது, "முதலில் இந்த முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கவில்லை. கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் பந்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பந்து நடத்துவதா? அல்லது வேறு என்ன வகையான போராட்டங்களை நடத்தலாம்? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மாவட்ட நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்ட பந்தை அங்கீகரிக்கவில்லை" என்று வாதிட்டார்.

நடவடிக்கை எடுக்கலாம்

இதையடுத்து நீதிபதிகள், "முழு அடைப்பு போராட்டத்தை மாநில பா.ஜ.க., அறிவிக்கவில்லை என்று கூறப்படுவதால், கோவையில் வருகிற 31-ந் தேதி பா.ஜ.க. வினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினால், அவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்