சிவகிரி அருகே ஜாமீனில் வந்தவர் கொலை:7 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சிவகிரி அருகே ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-14 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜாமீனில் வந்தவர் கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது உறவுக்கார பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் அரிவாளால் சிவக்குமாரை வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் நேற்று முன்தினம் சிவகிரி கோர்ட்டில் ஆஜராவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஓட, ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் நண்பர்கள் பழிக்குப்பழியாக செல்வகுமாரை கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மர்ம கும்பலை பிடிக்க புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன், சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

7 பேரிடம் விசாரணை

இந்த தனிப்படையினர் தேவிப்பட்டணத்தை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்