காவல் துறையினருக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது

மற்ற துறையைவிட காவல் துறையினருக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக, மருத்துவ முகாமை தொடங்கிவைத்து கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.

Update: 2023-01-22 16:47 GMT

மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

மன அழுத்தம் அதிகம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் முதல் முறையாக நமது மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் வருடத்தில் இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

மற்ற துறையை ஒப்பிடும் போது காவல்துறையின் வேலை நேரம் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியில் உள்ள காவல்துறையினர் மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.

ரத்த அழுத்தத்தினால் இதயத்தில் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. மற்ற துறையைவிட காவல்துறையினருக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜனவரி மாதத்தில் இந்த முகாம் நடக்கிறது. மீண்டும் ஜூன் மாதத்தில் இதேப்போல் சிறப்பு மருத்துவ முகாம் காவல்துறையினருக்காக நடத்தப்படும். இதுபோன்ற சிறப்பு முகாமை காவல்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்திக்கொண்டு நலமோடு வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்