மீட்பு உபகரணங்களுடன் போலீசார் தயார்
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு உபகரணங்களுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
விழுப்புரம்:
வங்கக்கடலில் உருவாகும் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், இந்த புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ளவும், அதனால் பெய்யும் கனமழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீட்பு உபகரணங்களுடன் போலீசார் தயார்
மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 30 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்களிலும் தேவையான அனைத்து மீட்பு உபகரணங்களுடனும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள் அவசரகால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், பொக்லைன் எந்திரம், டயர் டியூப்புகள், கயிறு, மரம் வெட்டும் எந்திரங்கள், அரிவாள், மண்வெட்டி, டார்ச் லைட், சர்ச் லைட், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கனமழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பேரிடர் மீட்பு படையினருடன் போலீசாரும் முகாமிட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.