கடுங்குளிரை சமாளிக்க சோதனைச்சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் தீ மூட்டி கண்காணிப்பு
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மாநில எல்லைகளில் பணியாற்றும் போலீசார் வனத்துறையினர் கடும் குளிரை சமாளிக்க தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மாநில எல்லைகளில் பணியாற்றும் போலீசார் வனத்துறையினர் கடும் குளிரை சமாளிக்க தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடுங்குளிர்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முழுவதும் உறைபனி காலநிலை நிலவும். இதனால் கடும் குளிர் வாட்டி எடுப்பது வழக்கம். நடப்பு ஆண்டில் மிக தாமதமாக உறைபனி தாக்கம் காணப்படுகிறது. கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.
அதன்படி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் இரவு முழுவதும் உறைபனி காணப்படுவதால் காலை நேரத்தில் பசும் புல்வெளிகள் வெண்மையாக காட்சியளிக்கிறது. இதேபோல் மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியிலும் இரவு கடும் குளிர் காணப்படுகிறது. மாலை 4 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைவதால் பனிபடர்ந்து இரவு முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.
தீ மூட்டி கண்காணிப்பு
கூடலூர்- பந்தலூர் தாலுகா பகுதியில் கேரளா, கர்நாடக மாநில எல்லைகள் உள்ளதால் சோதனைச்சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் இணைந்து இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் முதல் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாநில எல்லைகளில் பணியாற்றும் போலீசார், வனத்துறையினர் கடுங்குளிரை சமாளிக்க இரவில் காய்ந்த விறகு கட்டைகளைக் கொண்டு தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் - வனத்துறையினர் கூறும்போது:- கடந்த ஒரு வாரமாக குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. கம்பளி ஆடைகளை அணிந்தாலும் அதிகாலையில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் குளிரை சமாளிக்க தீ மூட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.