விவசாயியை கத்தியால் குத்திய போலீஸ்காரர் மீது வழக்கு

நில அளவீடு செய்யும் போது ஏற்பட்ட தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-07 17:38 GMT

நில அளவீடு செய்யும் போது ஏற்பட்ட தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.2 லட்சம் கடன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ராவணபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 53). இவரது மாமியார், தங்கவேலு என்பவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு புரோ நோட்டு மூலமாக ரூ.2 லட்சம் கடன் கொடுத்ததாக தெரிகிறது. அதை பலமுறை கேட்டும் தங்கவேலு திருப்பி தரவில்லை. அதைத்தொடர்ந்து புரோ நோட்டை வைத்து ரங்கநாதன் தரப்பில் உடுமலை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் கடந்த 2008-ம் ஆண்டு வலைவாளத்தில் உள்ள தங்கவேலுக்கு சொந்தமான 10.50 ஏக்கர் நிலத்தை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்து 300-க்கு ரங்கநாதன் பெயருக்கு ஏலம் எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இரண்டு முறை நீதிமன்ற அமீனா மூலமாக நிலத்தை சுவாதீனத்துக்கு எடுக்க ரங்கநாதன் முயன்றும் முடியவில்லை.

விவசாயியை கத்தியால் குத்திய போலீஸ்காரர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவுப்படி அமீனா, நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் தங்கவேலுக்கு சொந்தமான நிலத்தை அளக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த தங்கவேலுவின் மகனான கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு செந்தில்குமார், முத்துக்குமார், சேகர், முகம்மது ரியாஸ், சுந்தரவடிவேல், தங்கவேல், பரணி மற்றும் ஒருவர் ஆகிய 8 பேர் அரசு பணியாளர்களை நிலத்தை அளக்கவிடாமல் தடுத்தனர். மேலும் போலீஸ்காரர் செந்தில்குமார் ரூ.2 லட்சத்துக்கு ரூ.7 கோடி சொத்து வேணுமாடா என்று கூறி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரங்கநாதனை தாக்கியதாக தெரிகிறது. இதில் ரங்கநாதனுக்கு 2 இடங்களில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் ரங்கநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அவரை உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நில அளவீடுக்கு சென்ற போது அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்