நாமக்கல்லில் அதிகரிக்கும் மூகமுடி கொள்ளையர்களின் அட்டகாசம்: துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்

Update: 2022-11-27 18:28 GMT

நாமக்கல்லில் மூகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த வழக்குகளில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பெண்களிடம் நகைப்பறிப்பு

நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரிக் வண்டி தொழிலாளி. இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நவீனா (வயது 26) குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு நவீனா குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே புகுந்த 2 பேர் நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதேபோல் அதே நாளில் அங்கிருந்து சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள சரவணா நகரை சேர்ந்த முட்டை வியாபாரி அருண்குமார் மனைவி லட்சுமியிடம் வீட்டின் கதவை உடைத்து 2½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்புதுலக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இதனால் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதற்கிடையே நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள சாய் பிருந்தாவன் நகரில் 2 வீடுகளுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை 2.10 மணிக்கு முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கையில் அரிவாளுடன் நுழைந்துள்ளனர். ஆனால் வீடுகளில் கொள்ளை சம்பவம் ஏதும் அரங்கேறவில்லை.

வீட்டுக்குள் அரிவாளுடன் முகமூடி கொள்ளையர்கள் புகுந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் பிடிபடுவார்கள்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறியதாவது:- முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையிலும், பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டும் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் முகமூடி கொள்ளையர்கள் குறித்து அச்சம் அடைய தேவையில்லை. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள். தங்கள் பகுதியில் சந்தேக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்