விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரிடம் அனுமதிபெற வேண்டும்

விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

Update: 2022-08-25 19:26 GMT


விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதிகளில் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் விநாயகர் உருவச்சிலைகளை வைத்து வழிபாடு செய்து அதன் பின்னர், அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. விநாயகர் சிலைகள் மீதான வழிபாடு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலத்தின்போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நீர் நிலைகள்

விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு காவல்துறையின் முன்அனுமதி பெறப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுகளில் கரைத்த இடங்களிலேயே இந்த ஆண்டும் கரைக்க வேண்டும். சிலை வைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதை ஆகியவற்றிற்கு அனுமதி பெற வேண்டும்.

சிலை வைத்து வழிபாடு செய்ய அமைக்கப்படும் தற்காலிக கூடாரம் கண்டிப்பாக தென்னங்கீற்று, சாமியானா மற்றும் எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களினால் அமைந்திருத்தல் கூடாது. மாறாக தகரத்தினால், தற்காலிக மாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சாலையில் செல்லும்போது சாலையின் குறுக்கே செல்லும் மின்சார கம்பிகளின் மீது உயரமான சிலைகள் உரசி விபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை கரைக்க உத்தேசித்துள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்றார்போல் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

ஏற்பாடு

சிலைகளை நிறுவும் வழிபாட்டுக் குழுவினரே அந்த சிலைக்கு முழுப் பொறுப்பேற்கும் வகையில் சிலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங் களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்