2026 தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும் - அன்புமணி ராமதாஸ்

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-01-29 13:32 GMT

தர்மபுரி,

தர்மபுரி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

திமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் தேர்தலில் வெற்றி பெறாது. எனவே 2026 தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறாது. அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர். 55 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்ததால் மக்களிடையே சலிப்புத்தன்மை வந்துவிட்டது.

இந்த நிலையில் பாமகவிற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக போராடக் கூடிய ஒரே கட்சி பாமக தான். எனவே பாமகவை மக்கள் ஆதரிக்கும் மனநிலைக்கு வந்துள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்து அவர்களின் மனநிலையை வாக்கு வங்கிகளாக மாற்ற கடுமையாக பாடுபட வேண்டும். அதை நீங்கள் செய்தால் 2026 தேர்தலில் தமிழகத்தில் பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

நீர் மேலாண்மை, கல்வி,உயர்கல்வி,பொருளாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை தமிழக மக்கள் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை பாமக தொடர்ந்து செய்து வருகின்றனர். சில அரசியல் கட்சிகள் மீடியா கட்சியாக உள்ளன,சில அரசியல் கட்சிகள் தேர்தல் கட்சியாக உள்ளன, சில அரசியல் கட்சிகள் விளம்பர கட்சிகளாக உள்ளன, சில அரசியல் கட்சிகள் பிரிவினை உருவாக்கும் கட்சியாக இருக்கின்றன.

ஆனால் பாமக மட்டுமே மக்களுடைய வளர்ச்சிக்காக என்றும் உழைக்கும் கட்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்