என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து வரும் 3 கிராம மக்களுடன் ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சந்திப்பு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுப்போம் என்று உறுதி

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு நிலத்தை கொடுக்க மறுத்து வரும் 3 கிராம மக்களை ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சந்தித்தனர். அப்போது பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

Update: 2022-12-02 19:14 GMT


சேத்தியாத்தோப்பு, 

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்கம், 3-வது சுரங்கத்திற்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் தங்கள் நிலத்துக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு தந்தால் தான் நிலத்தை தருவோம் என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பா.ம.க.வினரும் கிராம மக்களுடன் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களை சந்தித்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

சந்திப்பு

அதன்படி பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.மூர்த்தி, எம்.டி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம், பசுமை தாயகம் மாநில தலைவர் அருள்ரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி பெண்கள் கூறுகையில், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஏற்கனவே நிலத்தை கொடுத்த கிராம மக்கள் இன்று வரை அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் நாங்களும் ஏமாற தயாராக இல்லை. நிலத்தை கொடுக்க நாங்கள் முன்வரவில்லை.

குரல் கொடுப்போம்

அப்படி கொடுக்கும் நிலை ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ.1 கோடி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, 10 சென்ட் அளவுக்கு மாற்று இடம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை கொடு்க்க முன்வருவோம் என்றனர்.

இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேசுகையில், பல ஆண்டுகளாக என்.எல்.சி. நிர்வாகம் இந்த பகுதிகளை மோசடி செய்து வருகிறது. கிராம மக்களை காலி செய்து விட்டு, இன்று வரை அவர்களுக்கு மாற்று குடியிருப்பு பட்டா வழங்காமல் உள்ளது. மத்திய அரசு செய்யும் இந்த வேலைகளுக்கு மாநில அரசும் துணை போகிறது.

நிலத்தடி நீரும் 800 அடிக்கு கீழே சென்று விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடம் கலந்து ஆலோசிப்போம். மேலும் உங்களின் பிரச்சினைக்கு தொடர்ந்து ஆதரவு குரல் கொடுப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் செல்வ.மகேஷ், சண்.முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கீரப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாநிலத் துணை தலைவர் வத்தவராயன்தெத்து செல்வராசு, விவசாயிகள் சங்க தலைவர் விவேக்ராம், ஸ்ரீமுஷ்ணம் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் சரண்ராஜ், சங்கர், ஜெகன், நகர செயலாளர் கலைமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பரமசிவம், அருள் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள், 3 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அகிலாண்டபுரம், வடக்குவெள்ளூர், கங்கைகொண்டான் பேரூராட்சியில் முதல் 3 வார்டு பகுதிகள் உள்ளிட்ட பகுதி மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்