பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-அன்புமணி ராமதாஸ் பேச்சு

“பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படும்” என்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-07-29 19:06 GMT

"பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படும்" என்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பொதுக்கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'பா.ம.க. 2.0' விளக்க பொதுக்கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சியோன்தங்கராஜ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட துணைத்தலைவர் செல்வம் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இன்னும் 3 ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தென் மாவட்ட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது.

தாமிரபரணி

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க 2 நாட்கள் 'கரம் கோர்ப்போம் தாமிரபரணி காப்போம்' என்ற கோஷத்துடன் பயணம் செய்தோம். ஆனால் தாமிரபரணியை சீரழித்து விட்டார்கள். அந்த தண்ணீர் குடிக்க, குளிக்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. வெள்ளநீர் கால்வாய் திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் வந்துவிடும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால் டிசம்பருக்குள் கட்டாயம் செயல்படுத்த முடியாது என்று நான் கூறுகிறேன். நான் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ், தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் மற்றும் 8 லட்சம் செவிலியர்கள் நியமனம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். 50 ஆண்டுகளில் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் அன்புமணி ராமதாஸ் செய்து விட்டார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டினார்.

டாஸ்மாக் கடைகள்

ஸ்டெர்லைட், கூடங்குளம், நெய்வேலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். எங்கள் மண்ணையும், மக்களையும் யார் தொட்டாலும் விடமாட்டோம். மண்வளத்தையும், கனிம வளத்தையும் பாதுகாக்க வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவோம். தரமான கல்வி வழங்குவோம். மக்களுக்கான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்துேவாம்.

ரூ.12½ லட்சம் கோடி தமிழ்நாட்டின் கடன் உள்ளது. அந்த கடனுக்கான வட்டி கட்டுவதற்கு கடன் வாங்கி கட்டக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, துணைத்தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், சின்னத்துரை, பாலகுரு, இசக்கிமுத்து, சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீசஸ் ஜான் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்