தமிழைத்தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம், மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு
தமிழைத்தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம் செல்லும் வழியில் மறைமலைநகரில் இன்று மாலை 5 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.
தமிழின் தாயகமாம் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன தமிழைத்தேடி என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை நோக்கி பரப்புரை பயணத்தை தொடங்குகிறார். பரப்புரை பயணம் செல்லும் வழியில் மறைமலைநகரில் இன்று மாலை 5 மணிக்கு பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற உள்ள பொதுகூட்டத்தில் தமிழைத்தேடி பரப்புரை பயணம் செல்லும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.
மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கி.ஆறுமுகம், மறைமலைநகர் பா.ம.க. நகர செயலாளர்கள் அரிகிருஷ்ணன், தணிகாசலம், மறைமலைநகர் பா.ம.க. நகர அமைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். தமிழைத்தேடி டாக்டர் ராமதாஸ் பரப்புரை பயணம் வருகி்ற 28-ந்தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.