பா.ம.க. நிர்வாகி மீது தாக்குதல்

Update: 2023-07-19 19:30 GMT

வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட பா.ம.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ம.க. நிர்வாகி மீது தாக்குதல்

சேலம் வடக்கு அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). பா.ம.க. பொன்னம்மாபேட்டை பகுதி செயலாளரான இவர், மருந்தகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே சுமார் 30 பேர் நின்று கொண்டிருந்தார். அதில் சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதை தட்டிக்கேட்ட கார்த்திகேயன் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கார்த்திகேயன் மற்றும் அங்கு வந்த அவருடைய தம்பி ராஜ்குமார் ஆகியோரை தேங்காய் மட்டை, மற்றும் கைகளால் தாக்கினர்.

3 பேர் கைது

இதில் காயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை தாக்கியது அம்மாபேட்டையை சேர்ந்த மணி, டேவிட் ராஜ்குமார் (வயது 23), அரசிராமணி, கணேஷ் (24), சிவா, ஜெகதீஷ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில் டேவிட் ராஜ்குமார், கணேஷ், ஜெகதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்