'பி.எம். கிசான்' திட்டம்: விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்
பி.எம். கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
உடன்குடி:
திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'பி.எம். கிசான்' திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியைப் பொருத்து, விவசாயிகளுக்கு 11 தவணை வரை ஊக்கத்தொகைகள் வரப்பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் மின்னணு முறையில் 'உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள்' (இ.கே.ஒய்.சி.) என்ற பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் தொடர்ந்து தவணைத்தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்து புதுப்பிப்பது அவசியமாகும்.
விவசாயிகள் மூன்று வழிகளில் இ.கே.ஒய்.சி. விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். முதலாவதாக தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி. எண் மூலம் சரிபார்ப்பு செய்யலாம். இரண்டாவதாக ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் இ-சேவை மையங்கள் மூலம் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல்ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்ப்பு செய்யலாம்.
மூன்றாவதாக பி.எம். செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு இ.கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிக்கலாம். இதற்காக அருகில் உள்ள தபால் நிலையத்தில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியினை அணுகியும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகி தெரிந்து கொள்ளலாம். திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களது ஆதார் விவரங்களை உடனடியாக பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் பதிவு செய்து தொடர் ஊக்கத்தொகை தவணைகள் பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.