திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவன் பலி

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-06-14 08:53 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மத்தூர் காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிஷோர் (வயது 17). இவர் மத்தூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து, கடந்த மாதம் அரசு பொதுத் தேர்வு எழுதி இருந்தார்.

தற்போது விடுமுறை என்பதால், கிஷோர் தனது உறவினர் ஒருவருடன் திருவிழா மற்றும் புதுமனை புகுவிழா நடக்கும் வீடுகளுக்கு ரேடியோ மற்றும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றிருந்தார். வீட்டின் மாடியில் அலங்கார விளக்குகள் அமைத்து கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகே சென்ற மின் கம்பி உரசி தூக்கி வீசப்பட்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்