அசைவ உணவு சாப்பிட்ட பிளஸ்-2 மாணவர் சாவு?

அசைவ உணவு சாப்பிட்டு பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆரணி டவுன் போலீசில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-01 16:45 GMT

ஆரணி

அசைவ உணவு சாப்பிட்டு பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆரணி டவுன் போலீசில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 மாணவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் மாவட்ட, நகர நிர்வாகிகள் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஆரணி ஆரணிப்பாளையம் மோகனன் தெருவை சேர்ந்தவர் ஆர்.கணேஷ். இவரின் மகன் திருமுருகன் (வயது 17). இவர், பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 24-ந்தேதி இறுதித்தேர்வு முடிந்ததும் அவரும், சக மாணவர்களும் சேர்ந்து ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் அசைவ உணவு (தந்தூரி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி) சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு மாணவர்கள் அனைவரும் ஒரு தியேட்டரில் சினிமா பார்த்தனர்.

இதையடுத்து அவர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவு தூங்கி விட்டு காலை எழுந்ததும் திருமுருகன் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். 2 நாட்கள் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். திருமுருகன் ஏற்கனவே சாப்பிட்டு இருந்த அசைவ உணவு நஞ்சாகி போனதால் குடல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

நீதி வழங்க ேவண்டும்

29-ந்தேதி அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது உடல்நலம் மோசமாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், திருமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

திருமுருகனின் சாவுக்கு அவன் சாப்பிட்ட அசைவ உணவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஓட்டலை பூட்டி 'சீல்' வைத்து, அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். எனவே திருமுருகனின் சாவுக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆரணி வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்