பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை: 16 நாட்களுக்கு பிறகு பள்ளி திறப்பு

திருவள்ளூரில் விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட பள்ளி 16 நாட்களுக்கு பிறகு திறந்தது. விடுதியின் மொத்த மாணவிகள் 64 பேரில் 23 பேர் மாற்றுச்சான்றிதழ் பெற்று தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.;

Update: 2022-08-11 07:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மாதம் 25-ந்தேதி பிளஸ்-2 மாணவி சரளா பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விடுதி காப்பாளர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். எனவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளி திறந்தால்தான் விடுதியில் தங்கி படித்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். சி.பி.சி.ஐ.டி. முதல் கட்ட விசாரணை முடிவடைந்ததால் பள்ளி இயங்க மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று 859 மாணவிகளில் 612 பேர் மட்டுமே வந்திருந்தனர். சரளாவுடன் விடுதியில் தங்கி பயின்ற 64 மாணவிகள் நேற்று பள்ளிக்கு வரவில்லை. விடுதியின் மொத்த மாணவிகள் 64 பேரில் 23 பேர் மாற்றுச்சான்றிதழ் பெற்று தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

மேலும் நேற்று பள்ளி தொடங்கினாலும், மாணவிகளுக்கு நேற்று பதற்றத்தை போக்கும் வகையில் மனநல ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கினார்கள். இன்றும் இந்த ஆலோசனை தொடரும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி இறந்த வழக்கில் 16 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் விடுதி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்