பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20,568 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) தொடங்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வை 20 ஆயிரத்து 568 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர் எழுத உள்ளனர். இதற்காக 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவும் 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்களில் மாணவர்களின் வரிசை எண் எழுதப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்களின் வசதிக்காக குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யப்பட்டு உள்ளது. தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
ஹால்டிக்கெட்
தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மின்னணு சாதனங்கள் எதுவும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
இதேபோல் பிளஸ்-1 தேர்வை 9 ஆயிரத்து 200 மாணவர்கள், 9 ஆயிரத்து 64 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 264 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை நடக்கிறது.