கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்பிளஸ்-2 பொதுத்தேர்வை 17,738 பேர் எழுதினர்தேர்வு மையத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 17,738 பேர் எழுதினர். தேர்வு மையத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தனா்.;
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 76 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 10 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 37 சுயநிதி பள்ளிகள் என்று மொத்தம் 123 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள் என்று மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர், தனித்தேர்வர்கள் 106 ஆண்கள், 129 பெண்கள் என்று மொத்தம் 20 ஆயிரத்து 804 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் பள்ளி மாணவர்கள் 74 தேர்வு மையங்களிலும், தனி தேர்வர்கள் தனியாக 4 தேர்வு மையங்களிலும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று தொடங்கிய தமிழ் முதல் தாள் தேர்வை 9 ஆயிரத்து 83 மாணவர்கள், 8 ஆயிரத்து 655 மாணவிகள் எழுதினார்கள். 2,831 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதேபோன்று தனித்தேர்வர்களில் 44 பேர் தேர்வு எழுதவரவில்லை. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
தேர்வு பணியில் தொடர்பு அலுவலர், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை ஆகிய பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் 500-க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.