பிளஸ்-2 தேர்வு முடிவு மே 5-ந் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பிளஸ்-2 தேர்வு முடிவு மே 5-ந் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தேர்வு மையங்களை அமைத்தல், ஹால் டிக்கெட் தயாரித்தல், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைத்தல் போன்ற தேர்வு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்புதல் தேர்வு
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பொதுத்தேர்வு மார்ச் 13-ந் தேதி தொடங்க உள்ளது. கடந்த காலங்களில் எந்தவித கெட்ட பெயரும் ஏற்படாமல் பொதுத்தேர்வை மிக அருமையாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடத்தி இருக்கிறார்கள். இதே போன்று இந்த முறையும் நல்ல முறையில் நடத்தி கொடுப்பார்கள்.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே ஒரு திருப்புதல் தேர்வு முடிந்துள்ளது. பிப்ரவரி மாதம் 2 திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. செய்முறை தேர்வு மார்ச் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம்.
இந்த தேர்வை முன்கூட்டியே வைத்தால் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்த எளிமையாக இருக்கும் என்று மாணவ-மாணவிகள் கருத்து சொல்லி இருக்கிறார்கள். எனவே மார்ச் முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை முடித்து விடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்களுக்கு...
தனித்தேர்வர்கள் தங்களுக்கு முறையாக தகவல் கிடைப்பது இல்லை என்று சொல்வது தவறு. ஏனென்றால் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள் வாயிலாக தகவலை வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் நலனை கருதி 30 மற்றும் 31 (இன்று), 1 (நாளை) ஆகிய 3 தினங்களில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வை எழுத வேண்டும் என்று ஆர்வம் உடையவர்களை விட்டு விட வேண்டாம். வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவு
பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கும். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 5-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 19-ந் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 17-ந் தேதியும் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்முறை தேர்வு தேதி மாற்றப்படும் என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பை தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 1-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.