பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Update: 2023-05-30 03:23 GMT

சென்னை,

அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்-2) பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 30-ந்தேதி இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்சென்று தங்களது விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் - அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 31-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் முதல் ஜூன் 3-ந்தேதி மாலை 5 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் - அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்தொகையை பணமாக செலுத்தவேண்டும். மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.505-ம், மறுகூட்டல்- உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305-ம் ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.205-ம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்