கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

கொல்லங்கோடு அருகே நண்பர்களுடன் குளித்த போது கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-01-27 18:45 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே நண்பர்களுடன் குளித்த போது கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளி விடுமுறை

கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மகன் ஸ்ரீஜித் (வயது16). இவர் கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீஜித்தும், அவருடன் படிக்கும் 6 நண்பர்களும் மார்த்தாண்டன்துறை கடல் பகுதிக்கு சென்றனர். நண்பர்கள் அனைவரும் கடற்கரையில் பல இடங்களை சுற்றி பார்த்து 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கடலில் குளிக்க இறங்கினர்.

அவர்கள் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆக்ரோஷமாக வந்த கடல் அலை ஒன்று ஸ்ரீஜித்தை கடலுக்குள் இழுத்து சென்றது. அவருக்கு நீச்சல் தெரியாததால் கடலுக்குள் மூழ்கினார். இதை பார்த்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து நண்பர்கள் கரையில் நின்று சத்தம் போட்டனர்.

பிணமாக மீட்பு

உடனே அந்த பகுதியில் நின்ற மீனவர்கள் விரைந்து வந்து கடலுக்குள் இறங்கி மாணவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து பெற்றோருக்கும், கடலோர காவல்குழும போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர் மாணவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுமுறை நாளில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் அலையில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்