பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருவள்ளூர் வீரராகவர் தெருவை சேர்ந்தவர் திலகவதி. இவரது மகன் பிரகாஷ்ராஜ் (வயது 15). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பிரகாஷ்ராஜ் தனது தாயாரிடம் புளூடுத் வாங்கி கேட்டுள்ளார்.
அதற்கு தாய் திலகவதி தான் பிறகு வாங்கி தருகிறேன் என கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த திலகவதி வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகன் பிரகாஷ்ராஜ் படுக்கை அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முத்து (68). இவர் நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.