பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை

திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-22 11:20 GMT

திருவண்ணாமலை தாலுகா சண்முகா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் பள்ளிகளில் நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் உயர்கல்வியை அதிகளவில் படித்து வருகின்றனர் என்றார்.

முன்னதாக பள்ளியில் உள்ள சமையலறையை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய 17 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 கிராம் வெள்ளி நாணயம் நினைவு பரிசாக துணை சபாநாயகர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு மாதிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா, உயர்கல்வி வழிகாட்டி ஆனந்தலட்சுமி, தலைமைஆசிரியர் ராமதாஸ், திருவண்ணாமலை தாசில்தார் சரளா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்