தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிப்பு

தர்மபுரியில் தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Update: 2022-10-31 18:45 GMT

தர்மபுரியில் தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினை பேணி பாதுகாக்கும் பொருட்டும், மறைந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதையொட்டி நாட்டின் உள் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினை கட்டிகாத்திடவும் தர்மபுரி மாவட்டத்தில் தேசிய ஒற்றுமை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியை வாசித்தார். இதனைத் தொடர்ந்து அரசு துறை அலுவலர்கள், கலெக்டர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தேசிய ஒற்றுமை ஓட்டம்

இதனை தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதை கலெக்டர் சாந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு, பள்ளிக்கல்வித்துறை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டமானது சேலம்-தர்மபுரி பிரதான சாலை, பாரதிபுரம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. இந்த ஓட்டத்தின் போது தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தணிகாசலம், அருள்மொழித்தேவன், மாவட்ட கருவூல அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, கலெக்டர் அலுவலக மேலாளர்கள் கேசவமூர்த்தி, அன்பு மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்