கூடைப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டி

தேனியில் மண்டல அளவிலான கூடைப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டி நடந்தது. இதில், தேனி உள்பட 5 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2023-09-02 22:45 GMT

தேர்வு போட்டிகள்

அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிகளை தேர்வு செய்வதற்கு ஏதுவாக மண்டல அளவிலான வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து, இறகுப்பந்து அணிகளுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் தேனியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மண்டல அளவிலான கூடைப்பந்து அணிகளுக்கான தேர்வு போட்டிகள் தேனி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. இதில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 228 மாணவர்கள் கலந்துகொண்டனர். 14 வயது, 17 வயது, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பிரதான வீரர்கள் உள்பட 11 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர்.

வீராங்கனைகள் தேர்வு

அதன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 5 மாவட்டங்களில் இருந்து 115 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தனித்திறன் மற்றும் குழு விளையாட்டுகளின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 6 பிரதான வீராங்கனைகள் உள்பட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இறகுப்பந்து அணிகளுக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்