நாங்குநேரி மாணவர் கைகளில் 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த நாங்குநேரி மாணவர் கையில் ‘பிளாஸ்டிக்’ அறுவை சிகிச்சையை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த நாங்குநேரி மாணவர் கையில் 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சையை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.
மாணவர்-தங்கைக்கு அரிவாள் வெட்டு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திராசெல்வி ஆகியோரை மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை
இதையடுத்து மாணவருக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதேவி தலைமையில் டாக்டர்கள் மகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள், பாளையங்கோட்டை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரையை பரிசோதித்தனர்.
அப்போது மாணவரின் இடது கையில் 3 இடங்களிலும், வலது கையில் ஓரிடத்திலும் ஆழமான வெட்டுக்காயம் இருந்த பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவ குழுவினர் மாணவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தொடங்கி, வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
4 வார ஓய்வு
பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர் சின்னத்துரைக்கு எலும்பு முறிவுக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டது. தற்போது மாணவரின் இரு கைகளிலும் ஏற்பட்ட காயங்களை ஆய்வு செய்து, உரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தசைநார்கள், ரத்தக்கு ழாய்கள், நரம்புகள் காயப்பட்டு இருந்தது. அவற்றை இணைக்கும் முக்கிய பணிகள் நடைபெற்றது. இடது கையில் 3 இடங்களிலும், வலது கையில் ஓரிடத்திலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. மொத்தம் 7 முதல் 8 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. நிபுணர் குழுவினர் தொடர்ந்து மாணவரை கண்காணித்து வருகின்றனர்.
மாணவருக்கு குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வு தேவை. 4 வாரத்துக்கு மாணவர் கைகளில் கட்டுப்போட்டவாறுதான் இருப்பார். அதன்பிறகே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடுத்தகட்ட நிலை தெரிய வரும். தற்போது இருவரையும் கிருமித்தொற்று வராத பாதுகாப்பான அறையில் வைத்துள்ளோம். எனவே, இங்கு பார்வையாளர்கள் வருவதை குறைத்து கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.