32 வகையான மரக்கன்றுகள் நடும் திட்டம்
தஞ்சை சமுத்திரம் ஏரியில் பறவை வாழ்விடங்களுக்காக 32 வகையான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.;
தஞ்சாவூர்;
தஞ்சை சமுத்திரம் ஏரியில் பறவை வாழ்விடங்களுக்காக 32 வகையான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
சமுத்திரம் ஏரி
தஞ்சை சமுத்திரம் ஏரியானது 242 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த ஏரி வெட்டப்பட்டது. இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்றுவதற்காக ரூ.8 கோடியே 8 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் சமுத்திரம் ஏரியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் 32 வகையான மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
32 வகையான மரக்கன்றுகள்
சமுத்திரம் ஏரியில் 3 தீவுகள் அமைக்கப்பட்டு, மரங்கள் நடப்பட்டு அவைகள் பறவைகள் வாழ்விடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 தீவு 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, அந்த தீவில் பலா, கொய்யா, தேக்கு, வேம்பு, மா உள்ளிட்ட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவை வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்படுகின்றன.
படகு சவாரி
மொத்தமாக தீவுகளின் பரப்பளவு 1 ஏக்கர் அளவில் இருக்கும். இந்த தீவுகள் அனைத்திலும் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சமுத்திரம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரியில் படகுசவாரி, குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பாண்டி, உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் அன்புச்செல்வன், தாசில்தார் மணிகண்டன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் சாந்திபிரியா, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், செயலாளர் ராம்மனோகர், இணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.