மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு பணி

கோடை சீசன் நெருங்கிய நிலையில், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-19 19:00 GMT

ஊட்டி

கோடை சீசன் நெருங்கிய நிலையில், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை

சுற்றுலா நகரமான நீலகிரிக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 5 நாட்கள் வரை நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நடவு பணிகள் தீவிரம்

இந்தநிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசனுக்காக தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகிறது. மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் முதல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. நாற்றுகள் அவைகள் வளரும் காலத்தை பொறுத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 35 ஆயிரம் தொட்டிகளிலும் கடந்த மாதம் முதல் நாற்று நடவு பணிகள் நடந்து வருகிறது. தற்போது 2 மாதங்களுக்கு பிறகு பூக்கும் மலர் நாற்றுக்களை நடவு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாள் தோறும் பூங்கா ஊழியர்கள் தொட்டிகளில் நாற்றுகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதி வாரம் முதல் பனியின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனியின் தாக்கம் குறைந்தால், தொட்டிகளில் வைக்கப்பட்டள்ள கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றப்படும். மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள நாற்றுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரும்பாலான செடிகளில் மலர்களை காண முடியும் என்று தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்