புதிதாக தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட இருப்பதாக வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-05-06 18:45 GMT

பயிர் சாகுபடி மானியம்

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னை வளர்ச்சி வாரியத்தின் பரப்பு விரிவாக்கத்திட்டத்தின் கீழ் தென்னை சாகுபடி செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பயிர் சாகுபடி மானியம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இளங்கன்று (ஒரு வருட கன்று) சாகுபடி செய்த விவசாயிகள் மட்டுமே பயனடைய முடியும். இத்திட்டத்திற்கான மானிய தொகை 1 ஹெக்டேருக்கு (175 தென்னங்கன்று) நெட்டை ரகத்திற்கு ரூ.6,500-ம், கலப்பின ரகத்திற்கு ரூ.6,750-ம் மற்றும் குட்டை ரகத்திற்கு ரூ.7,500-ம் இரண்டு தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

விண்ணப்ப படிவங்கள்

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், இதற்கான விண்ணப்ப படிவங்களை தென்னை வளர்ச்சி வாரிய இணையதளமான www.coconutboard.gov.in-ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண் அலுவலர் மூலமாக தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் நடவு வயலின் புகைப்படம், சிட்டா மற்றும் அடங்கல், ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல், வங்கி புத்தகத்தின் முன்பக்க நகல் மற்றும் நிலவரிச்சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்பிட வேண்டும். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்