நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கூடலூரில் நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-04 10:47 GMT

கூடலூர்

கூடலூரில் நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலுவை சம்பளம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் 3 மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கடந்த வாரம் எஸ்டேட்டுக்கு செல்லும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால், அடுத்த சில நாட்களில் சம்பளம் வழங்குவதாக எஸ்டேட் நிர்வாகம் உறுதி அளித்தது. இதை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். ஆனால் உறுதியளித்தபடி சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள போனஸ் தொகையை தர வேண்டும், 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தோட்ட தொழிலாளர்கள் அறிவித்தனர்.

வேலை நிறுத்தம்

அதன்படி இன்று காலை 9 மணிக்கு எஸ்டேட் தொழிற்சாலை முன்பு மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக தோட்ட தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தாசில்தார் சித்தராஜ், கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் தாலுகா அலுவலகத்தில் வைத்து தொழிலாளர் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடியும் வரையில் மறியலில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதனால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து எஸ்டேட் தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் குணசேகரன், முகமது கனி உள்பட தொழிலாளர்கள், எஸ்டேட் நிர்வாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில், அடுத்த 2 நாட்களில் சம்பளம் வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக எஸ்டேட் நிர்வாகம் உறுதி அளித்தது. தொடர்ந்து தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத்தினர் விளக்கம் அளித்தனர். இதை ஏற்று மதியம் 12 மணிக்கு தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, வருகிற 8-ந் தேதி சம்பளம் வழங்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றனர்.

இதேபோன்று கூடலூர் அருகே தேவர்சோலையில் தனியார் தோட்ட தொழிலாளர்கள் 2 மாத சம்பளம் வழங்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தோட்ட அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டது. இதை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்