காட்டேரி பூங்காவில் 1.90 லட்சம் மலர் செடிகள் நடவு

2-வது சீசனையொட்டி காட்டேரி பூங்காவில் 1.90 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2022-08-18 14:37 GMT

குன்னூர், 

2-வது சீசனையொட்டி காட்டேரி பூங்காவில் 1.90 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டம் புகழ் பெற்ற சுற்றுலா மாவட்டமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் காலங்களில் தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் வகையில் பூங்காவில் புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. குன்னூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி மலர் செடிகள் நடவு பணியை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக காட்டேரி பூங்கா முகப்பு தளத்தில் பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன.

மலர் செடிகள் நடவு

2-வது சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் வகையில் மலர் பாத்திகள், நடைபாதை ஓரம், மரங்களை சுற்றி உள்ள பாத்திகள் இயற்கை உரமிடப்பட்டன. மேலும் நிலம் பண்படுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட உள்ளது.

இதில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளை தாயமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜினியா, பெகோனியா, லூபின், டெல்பீனியம், மேரிகோல்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த செடிகள் நடவு செய்யப்படுகிறது. இந்த பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடவு செய்யப்படும் மலர் செடிகளில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் மலர்கள் பூத்து குலுங்கும் என தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்