சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமா?

சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமா?

Update: 2023-04-26 18:45 GMT

கோவை

கோடநாடு கொலை வழக்கில் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

கோடநாடு கொலை வழக்கு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொலை, கொள்ளை நடைபெற்றது. காவலாளி ஓம்பகதூர், 11 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முக்கிய ஆசாமியான சேலம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி விபத்தில் உயிரிழந்தார்.

இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராகவும் இருந்தார். மற்றொரு ஆசாமியான சயான் தனது காரில் குடும்பத்தினருடன் சென்றபோது கேரள மாநிலம் கண்ணாடி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது மனைவி, மகள் இறந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இந்த வழக்கில் பல சந்தேகங்களை எழுப்பியது.

இந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு 300-க்கும் மேலானவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் சிறப்பு பிரிவினர் கோடநாடு வழக்கை தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றது.

கோடநாடு பங்களா, டிரைவர் கனகராஜ் இறந்த இடம், இந்த கொலை வழக்கில் இறந்த சயான் குடும்பத்தினர் உயிரிழந்த இடம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய வாகனங்கள் குறித்தும் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

இதற்கிடையில் டிரைவர் கனகராஜ், எடப்பாடியில் உள்ள ஒரு ஜோதிடரை சந்தித்துள்ளார். அப்போது ஜோதிடர் அவரிடம், மிகப்பெரிய கண்டம் இருப்பதாகவும், உஷாராக இருக்குமாறும் கூறியதாக தெரிகிறது. அன்று இரவுதான் விபத்தில் கனகராஜ் இறந்துள்ளார்.

எனவே அந்த ஜோதிடரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஜோதிடரின் விவரங்களை சி.பி.சி.ஐ.டி.போலீசார் சேகரித்துள்ளனர். அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஜோதிடர் ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகலாவிடம் மீண்டும் விசாரணை?

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் கூறும்போது, சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்