மீண்டும் படகு சவாரி தொடங்க திட்டம்
ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்க திட்டமிட்டு உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்க திட்டமிட்டு உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
படகு சவாரி
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ ஆழியாறு அணை அமைந்து உள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள இந்த அணைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அணை, பூங்காவை சுற்றி பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அணையில் படகு சவாரி நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் படகு சவாரியை தொடங்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் செலவில் படகு பழுது பார்த்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பழுது பார்க்கும் பணி
ஆழியாறு அணையில் பேரூராட்சி மூலம் படகு சவாரி நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கு ரூ.30, பெரியவர்களுக்கு ரூ.40 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படகு சவாரி நிறுத்தப்பட்டது. படகுகள் அணையின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டதால் படகுகள் பழுதடைந்தன.
தற்போது பழுதடைந்த ஒரு படகில் பழுது பார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படகில் 15 பேர் வரை பயணம் செய்யலாம். பழுது பார்ப்பு பணிகள் முடிந்ததும் படகு சவாரி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக படகு சவாரி கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அனுமதி கிடைக்குமா?
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியாறு அணை நிரம்பி, பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக 24 மணி நேரமும் அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றோம். இதனால் தற்போது அணையில் படகு சவாரி நடத்த அனுமதி கொடுக்க வாய்ப்பு குறைவு தான்.
இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அனுமதி கொடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.