போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற திட்டம்

போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துக்கு பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-08-18 00:38 GMT

சென்னை,

ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் என பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட் 85 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது.

புதிதாக மார்க்கெட் அமையும் இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு இடம் என்று பிரமாண்டமாக வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக் பீல்டு நிறுவனத்திடம் கட்டுமான வடிவமைப்பை தயார் செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) கேட்டுக்கொண்டுள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வு

கோயம்பேடு மார்க்கெட்டை மறுசீரமைப்பு செய்து வேறு எந்த பயன்பாட்டுக்காக உபயோகிக்கலாம் என்பதை கண்டறியவும், மார்க்கெட்டை முழுவதுமாக திருமழிசையில் அமைக்கலாமா? பாதியை மட்டும் அங்கு கொண்டு செல்வதா? என அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் கடைகளை மொத்த வியாபாரிகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இனி அவர்களை திருமழிசைக்கு மாற்றும்போது அதற்கான இழப்பீடு தொகையையும் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது.

வியாபாரிகளின் உரிமையை பாதுகாத்து அவர்களுக்கு சரியான இழப்பீட்டையும் வழங்கும் போது தாமாகவே இடம் பெயர ஒத்துக்கொள்வார்கள் என சி.எம்.டி.ஏ. கருதுகிறது.

50 ஏக்கரில் வணிக வளாகம்

திருமழிசையில் மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதம் அல்லது 29.75 ஏக்கர் நிலப்பரப்பு திறந்தவெளிகள், பூங்காக்கள், சாலைகள் அமைக்க ஒதுக்கப்படுகிறது.

30 முதல் 50 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம் அமைக்கவும் மீதமுள்ள இடத்தை எதிர்கால வளர்ச்சிக்காக பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒருவேளை மார்க்கெட்டின் ஒரு பகுதியை மட்டும் திருமழிசைக்கு மாற்றுவதாக இருந்தால் மீதமுள்ள பகுதியை வியாபாரிகள் பயன்படுத்த அனுமதிக்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரூ.12 கோடி வருமானம்

கோயம்பேட்டில் கனரக வாகன போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் காரணமாக நெரிசலாகிவிட்டது. எனவே, இந்த பகுதியை வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் மாநிலம் முழுவதும் இருந்து வருபவர்களை கவரும் இடமாக கோயம்பேடு மாறும். கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் கட்ட திட்டப்பணியை இணைக்கும் பகுதியாக இருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருமானம் கிடைக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோயம்பேடு மார்க்கெட் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவிடுகிறது. எனவே லாபம் ரூ.30 லட்சம் மட்டுமே கிடைக்கிறது.

வளர்ச்சி அடிப்படையில் பணி

கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தமட்டில் நுழைவுக்கட்டணம், வாகன நிறுத்தக்கட்டணம், திறந்த வெளிப்பகுதிகள் மூலம் தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது.

இங்கு வணிக வளாகம் போன்ற புதிய வசதிகளை உருவாக்குவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கோயம்பேடு உள்பட சென்னையின் வடமேற்கு பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

திருமழிசையில் புதிய மார்க்கெட்டை உருவாக்குவது, கோயம்பேட்டை நவீன மயமாக்குவது மூலம் பெரிய அளவில் வளர்ச்சியை உருவாக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. இந்த திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்