வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்

பணப்பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கி சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கி சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது.

Update: 2022-11-01 19:02 GMT

வங்கி சேவைகள்

மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது. இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல், வங்கி சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுக வேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் வருமாறு:-

மொபைல் ஆப்

வங்கி அதிகாரி கிருபா:- தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக பெருகி உள்ளது. 24 மணி நேரமும் ஏ.டி.எம். செயல்படுகிறது. பணம் செலுத்துவதற்கும் எந்திரங்கள் உள்ளன. மொபைல் ஆப் அனைத்து வங்கிகளும் கொடுக்கிறார்கள். வீட்டில் இருந்துகொண்டே பணம் செலுத்தி கொள்ளலாம். மேலும் நெட்பேங்கிங் வசதியும் உள்ளன. தற்போது பொதுமக்கள் வங்கியின் ஆப் வசதிகளையும், ஜி பே, போன் பே போன்ற ஆப்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆர்.டி. செலுத்துவது, வங்கி கிளைகள் மாற்றம் செய்வது என்பன உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து கொள்ளலாம். இதற்காக அனைத்து வங்கிகளும் இதுபோன்ற வசதிகளை பயன்படுத்துவது குறித்து தெரிவித்து உள்ளன. தற்போது வங்கிகளில் பொதுமக்கள் பணபரிவர்த்தனை செய்வது மாலை 4 மணி வரை இருந்தாலும், அதன்பிறகு மற்ற பணிகளை செய்து முடிக்க நேரம் அதிகமாகிறது. இதனால் 5 நாட்கள் செயல்படுவது என்பது சரியானதாக இருக்கும். வங்கிகள் 5 நாட்கள் இயங்கும்போது, வங்கிகள் செயல்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வியாபாரிகள் பாதிப்பு

கரூரை சேர்ந்த சுந்தரராஜன்:- வங்கிகள் 6 நாட்கள் செயல்படுவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. வங்கி சேவை என்பது பாதுகாப்பானது. வங்கிகள் 5 நாட்கள் திறக்கும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் வங்கியில் நின்று பண பரிவர்த்தனை செய்யும் நேரம் அதிகமாகும். வங்கிக்கு சென்று பரிவர்த்தனை செய்வதுதான் பாதுகாப்பானது. ஆன்லைன் மூலமாக அதிகமாக பணத்தை பரிவர்த்தனை செய்வது என்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பது தெரியவில்லை. யு.பி.ஐ. மூலமாக பணம் செலுத்துவதற்கும் கட்டணம் வரும் என்று கூறுகிறார்கள். அப்படி வந்தால் நாம் மீண்டும் வங்கிக்கு தான் செல்ல வேண்டும். கரூரில் டெக்ஸ்டைல்ஸ் அதிகளவில் உள்ளதால் பண பரிவர்த்தனை அனைத்தும் வங்கிகள் மூலமே செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஊதியம் வழங்குவதில் சிரமம்

குளித்தலையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் செந்தில்குமார்:- பல்வேறு இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் சாலை போடுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமை தோறும் ஊதியம் வழங்குவது வழக்கம். அவ்வாறு அன்று ஊதியம் வழங்கும் போது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வேலையாட்களுக்கு கூலி வழங்குகிறோம். சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால் வேலையாட்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்படும். ஏ.டி.எம்.களில் குறைவான தொகையை ஒரு நாளைக்கு எடுக்க முடியும். அவ்வாறு பணம் எடுப்பதால் போதுமான தொகை கிடைக்காது.

பணம் எடுக்க முடியாது

நொய்யல் அருகே நடையனூரை சேர்ந்த மருதையப்பன்:- விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விவசாய இடுபொருட்களை எங்கள் நிறுவனத்தில் வாங்கி செல்கின்றனர். இந்த தொகையை அருகாமையில் உள்ள அரசுக்கு சொந்தமான வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்து வைக்கிறோம். அவ்வப்போது தேவைப்படும்போது பணத்தை எடுத்து வருகிறோம். சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால் யாருக்காவது பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் எடுக்க முடியாது. எனவே வங்கிகள் வாரத்தின் 6 நாட்களும் செயல்பட வேண்டும்.

வாரத்தின் 6 நாட்களும் செயல்பட வேண்டும்

புகழூர் செம்படாபாளையம் பகுதியை சேர்ந்த கியாஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் செல்வக்குமரன்:- எங்களது கேஸ் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சிலிண்டரை ஏற்றிக்கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு வந்து அந்த பணத்தை எங்களிடம் கொடுத்து விடுவார்கள். நாங்கள் பணத்தை இப்பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் செலுத்தி விடுவோம். எங்களது கேஸ் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கும் போதும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போதும் அவ்வப்போது சென்று பணத்தை எடுத்து வருவோம். சில நேரங்களில் சனிக்கிழமைகளில் அதிகளவு பணம் தேவைப்படும் சூழ்நிலை ஏற்படும் போது வங்கிக்கு சென்று பணம் எடுத்து வருவோம். இந்தநிலையில் சனிக்கிழமைகளில் வங்கி செயல்படாமல் இருந்தால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே வாரத்தில் 6 நாட்களும் வங்கிகள் செயல்பட வேண்டும். என்றார். இதேபோல் ஜவுளிக்கடைகள், பெயிண்ட் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களிடம் இது குறித்து கருத்து கேட்டபோது அவர்கள் எங்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வங்கிகள் செயல்பட வேண்டும் என்றனர்.

வேலைப்பளு அதிகரிக்கும்

கரூரில் தனியார் நிறுவனத்தில் வங்கி தொடர்பான பணிகளை கவனிக்கும் அங்குராஜ் கூறியதாவது:- வங்கிகள் ஏற்கனவே இருக்கக்கூடிய நடைமுறையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. மக்களும், வணிகர்களும், சிறு, குறு நிறுவனங்களும் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே அறிவித்த 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை விடும்போது, வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வங்கிகளில் கூட்டம் அதிகரித்து, பெரும் அவதி ஏற்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கும் அதிகப்படியான வேலைப்பளு கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதில் வணிகர்களும் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கரூர் மாநகரில் ஏ.டி.எம். எந்திரத்தில் வெள்ளிக்கிழமை நிரப்பும் பணம் சனிக்கிழமைகளில் தீர்ந்து விடும் சூழல் உள்ளது. வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. வங்கிகளில் பணம் இருந்தாலும் அதற்கு மேல் நம்மால் எடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பலர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் சர்வர் அதிகமாக பயன்படுத்தும்போது அதன் வேகம் குறையும் சூழல் உள்ளது. இதனால் பணம் டெபிட் ஆகிறது. திரும்ப வராமல் செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலைகளில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் விடுமுறையென்றால் அனைத்து வணிகர்களுக்கும் மிகப்பெரிய தர்மசங்கடமான நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்கள் பாதிப்பு

லாலாபேட்டை சுய உதவி குழுவின் ஒருங்கிணைப்பாளர் சேசுராஜ் கூறியதாவது:- பொதுத்துறை வங்கிகள் எப்பொழுதும் மாதத்தின் 2 சனிக்கிழமை வேலை நாட்களாகவும், இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் இனி விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் கிராமப்புற பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கிராம ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் கரூரில் இருந்து திருச்சி சென்று பணிபுரிகிறார்கள். இந்த நிலையில் கூலி தொழிலாளர்கள் தங்களது பணதேவையை பூர்த்தி செய்யவும், நகைக் கடன் பெற பெரும்பாலும் சனிக்கிழமை அன்று விடுமுறை எடுத்து வங்கிக்கு சென்று வருகிறார்கள். இந்தநிலையில் சனிக்கிழமைகளில் வங்கிக்கு விடுமுறை அளித்தால் கிராமப்புற மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை அளிக்கும் நாட்களில் அடுத்து வரும் திங்கட்கிழமையன்று வங்கிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். தற்போது இந்த அறிவிப்பு வந்தால் மற்ற வேலை நாட்களில் அவர்களுடைய வேலைகளை விட்டுவிட்டு விடுமுறை எடுத்து தான் வங்கிக்கு வர வேண்டிய சூழ்நிலை நிலவும். இதனால் கிராமப்புற மக்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதுடன், அவர்களுடைய வேலையும் பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு முன்பு போலவே சனிக்கிழமையன்று வங்கிகள் எப்பொழுதும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்