மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்த பரிதாபம்-உடலை காட்டில் வீசிய விவசாயி கைது

வந்தவாசி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்தார். அவனது உடலை தூக்கிச்சென்று காட்டில் வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-20 18:45 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்தார். அவனது உடலை தூக்கிச்சென்று காட்டில் வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

காட்டுப்பன்றிகள் தொல்லை

வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). விவசாயியான இவர் தனது நிலத்தில் வேர்கடலை பயிரிட்டுள்ளார்.

இவரது வயலில் காட்டுப்பன்றிகள் தினமும் வேர்க்கடலையை நாசமாக்கி வருகிறது. இதனால் காட்டுப்பன்றியை கொல்வதற்காக சட்டவிரோதமாக பயிரைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்த சேகர் மகன் சக்திவேல் (18) மற்றும் தனது 17 வயது நண்பனுடன் முயல் மற்றும் எலிகளை வேட்டையாடுவதற்கு சென்றார்.

நள்ளிரவு மின்வேலி வயர் இருப்பதை அறியாமல் அதனை சக்திவேல் மித்து விட்டார். இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டில் உடல்வீச்சு

இதைப் பார்த்த அவனுடன் சென்ற சிறுவன் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இதையடுத்து இரவு நேரத்தில் வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஏழுமலை சென்றபோது மின் வேலியில் சிக்கி சக்திவேல் உயிரிழந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அதனை மறைப்பதற்காக சக்திவேலின் உடலை எடுத்துக்கொண்டு 10 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் மறைத்து எடுத்துச்சென்றார்.

அங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசி விட்டு திரும்பி விட்டார்.

புகார்

இதனிடையே சக்திவேல் இறந்ததை பார்த்ததும் அவருடன் சென்று தப்பிய சிறுவன் சக்திவேலின் பெற்றோரிடம் நேற்று காலை தெரிவித்தான்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது சக்திவேல் உடல் அங்கு இல்ைல. இது குறித்து அவர்கள் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றபோது சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் வயல் உரிமையாளர் ஏழுமலையிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக அவர் கூறினார்.

அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் மின்வேலியில் சிக்கி இறந்த சக்திவேலின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் காட்டிற்கு கொண்டு சென்று வீசியதை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து ராமாபுரத்துக்கு ஏழுமலையுடன் போலீசார் விரைந்தனர். அங்கு அடர்ந்த காட்டிற்கு அவரை அழைத்துச்சென்றனர். சக்திவேல் உடல் வீசப்பட்ட இடத்தை காண்பித்தபோது புதராக இருந்தது. பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து புதர்களை அகற்றியபோது சக்திவேல் உடலை கண்டுபிடித்தனர். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பரபரப்பு

அனுமதியின்றி அமைத்த மின்வேலியில் அதில் சிக்கி சக்திவேல் இறந்ததும், அதனை மறைப்பதற்காக உடலை ஏழுமலை இருசக்கர மோட்டார்சைக்கிளில் 10 கிலோ மீட்டர் தூக்கிச்சென்று அடர்ந்த காட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்