குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வழங்கும் திட்டம்

ராணிப்பேட்டை பகுதியில் குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் ஆர்.காந்தி, அதி்காரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-12-26 18:31 GMT

குழாய் மூலம் எரிவாயு

ராணிப்பேட்டை நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் குழாய் இணைப்பு மூலம் இயற்கை எரிவாயு வழங்குவது குறித்து அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல்

ராணிப்பேட்டை நகராட்சி மற்றும் அதனை சுற்றி 30 கிலோமீட்டர் சுற்றளவில் கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயுவை குழாய்கள் மூலம் வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை நகராட்சி முழுவதும் மற்றும் அதனை சுற்றியுள்ள வாலாஜா ஊராட்சி ஒன்றிய கிராமப்புற ஊராட்சிகளும் மற்றும் சிப்காட் தொழில் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும் போது போக்குவரத்து பாதிப்படையாத வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், சாலைகளில் குழாய்கள் பதித்து உடனுக்குடன் சாலைகள் போட வேண்டும். அதேபோன்று எரிவாயு குழாய்கள் பதிக்கப்படும் பணியையும், குடிநீர் திட்ட பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் குழாய் பதிக்கும் பணியையும் 2 துறைகளும் இணைந்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி ஒரே நேரத்தில் 2 பணிகளையும் முடிக்கும் வகையில் பணியை தொடங்க வேண்டும்.

நிவர்த்தி செய்ய வேண்டும்

இயற்கை எரிவாயு வழங்கும் நிறுவனம் சாலைகளில் பள்ளம் தோண்டும் போது மற்ற பணிகளுக்கு ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள், வயர்கள் பாதிப்படையாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலைகள் அமைப்பதில் நிதி பிரச்சினைகள் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இயற்கை எரிவாயு நிறுவனம் மூலம் நிதி வழங்கும் திட்டத்தில் பல்வேறு இடங்களில் சந்தேகங்கள் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்ய நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கென தனித்தனியே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தி அவர்களின் சந்தேகங்களை இயற்கை எரிவாயு நிறுவனம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன், வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், இயற்கை எரிவாயு வழங்கும் நிறுவன மற்றும் மண்டல தலைவர்கள் வெங்கடேசன், அருண் பிரசாத், மேலாளர் சுரேஷ், உள்ளாட்சிபிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்