பிள்ளையார்விளை கிராம மக்கள் சாலை மறியல்
திருவிழாவுக்கு மின்விளக்குகள் கட்ட அனுமதி கோரி பிள்ளையார்விளை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
ராஜாக்கமங்கலம்,
திருவிழாவுக்கு மின்விளக்குகள் கட்ட அனுமதி கோரி பிள்ளையார்விளை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்விளக்குகள் கட்ட எதிர்ப்பு
ராஜாக்கமங்கலத்தை அடுத்த பிள்ளையார்விளையில் நாராயணசாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மின் விளக்குகள் பிள்ளையார்விளை ஊர் முழுவதும் கட்டப்பட்டது. பின்னர் கோணம்-ராஜாக்கமங்கலம் சாலையின் ஓரத்திலும் மின்விளக்குகள் கட்ட ஊர் நிர்வாகிகள் முற்பட்டனர். ஆனால் ஏற்கனவே அந்த பகுதியில் எல்லை பிரச்சினை உள்ளதால் மின் விளக்குகள் அமைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் ஊர் நிர்வாகிகளுடன் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
கிராம மக்கள் சாலை மறியல்
இந்தநிலையில் இரவு 8 மணிக்கு ஊர் மக்கள் திடீரென கோணம்- ராஜாக்கமங்கலம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், மண்டல துணை தாசில்தார் அருள்லிங்கம், ராஜாக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பிரதீப் ராஜா ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பகுதியில் எல்லை பிரச்சினை உள்ளதால் பிரதான சாலையில் மின் விளக்குகள் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி வேண்டும் எனவும் அனுமதி இல்லாத பட்சத்தில் மின்விளக்குகள் அமைக்கக் கூடாது என்றனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிள்ளையார்விளை ஊர் மக்கள் அனைவரும் கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிரடி படை போலீசார் வரவழைக்கப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கணபதிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.