முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கொடைக்கானல் பெரிய காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-04-12 16:18 GMT

கொடைக்கானல் டோபிகானலில் பெரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 73-ம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பெரிய காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மேலும் இரவில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி டிப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் அக்னிக்சட்டி எடுத்தும், அலகுகுத்தியும் ஊர்வலமாக புறப்பட்டனர். கொடைக்கானல் ஏரிச்சாலை, பஸ் நிலையம், அண்ணா சாலை, மூஞ்சிக்கல் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர். ஊர்வலத்தின்போது சில பக்தர்கள், கருப்பண சுவாமி மற்றும் காளி வேடம் அணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் கோவிலில் பெரிய காளியம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, வண்ண மலர்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில், கொடைக்கானலை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்