விருத்தாசலம் நகரின் அழகை பாழ்படுத்தும் பன்றிகள் தடுக்க முடியாமல் திணறும் நகராட்சி நிர்வாகம்

விருத்தாசலம் நகரின் அழகை பன்றிகள் பாழ்படுத்தி வருகிறது. அதனை தடுக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

Update: 2022-09-26 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சியில் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பன்றிகள் நகரம் முழுவதும் சுற்றித்திரிகிறது. அவை சாலையோரம் கிடக்கும் குப்பைகளை சாலை முழுவதும் கிளறி விடுவதுடன், அதில் மேய்ந்து விட்டு, குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் உருண்டு புரண்டு எழுந்து விட்டு, வீடுகளின் அருகிலேயே படுத்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் துர்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் அவை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பல்வேறு நோய்கள் எளிதில் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில், பன்றிகளால் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாய நிலை நிலவி வருகிறது. விருத்தாசலம் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நகரின் அழகையும் பாழ்படுத்தி வருகிறது.

எச்சரிக்கை நோட்டீஸ்

அதனால் இந்த பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு, பன்றிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி, பன்றிகளை தாங்களாகவே பிடித்து அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அதை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடிக்கும் படலம் தொடங்கியது.

திணறும் நகராட்சி

ஆனால் பன்றிகளை வளர்ப்பவர்கள், அதனை பிடித்து அப்புறப்படுத்தவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரம் மற்றும் மதுரையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வரவழைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளை பிடிக்கும் பணி நடந்தது. இதில் 60-க்கும் மேற்பட்ட பன்றிகளை லாரியில் ஏற்றிய நிலையில், பன்றி வளர்ப்போர் லாரியை வழிமறித்து கற்களை வீசி சேதப்படுத்தினர். அதன் பிறகு பன்றிகள் வளர்ப்போரின் எதிர்ப்பால், இதுவரை பன்றிகளை பிடிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

அதனால் பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பன்றிகளின் உரிமையாளர்களும் தாங்கள் வளர்க்கும் பன்றிகளை பொதுவெளியில் விடாமல் பண்ணை அமைத்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்