குடிநீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த பன்றிக்குட்டி
குடிநீர் தொட்டிக்குள் பன்றிக்குட்டி இறந்து கிடந்தது.;
திருச்சி மாநகராட்சி குமரன் நகர் முதல் தெருவில் பொது குடிநீர் குழாய் ஒன்று பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இறங்கி தண்ணீர் பிடிப்பதற்கு வசதியாக படியுடன் தொட்டி அமைத்துள்ளனர். இந்த தொட்டியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த தொட்டிக்குள் பன்றிக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் இறந்து கிடந்த பன்றியை அப்புறப்படுத்தினர். மேலும் தொட்டியில் தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டது.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரு நாய்கள் ஒரு பன்றிக்குட்டியை விரட்டியது. இதில் அந்த பன்றிக்குட்டி குடிநீர் தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர். மேலும் இது போன்று நடைபெறாமல் இருக்க குடிநீர் தொட்டிகளை மூடி பாதுகாப்பான முறையில் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.